ஜிம்பாப்வே அதிபர் முகாபேவுக்கு எதிராக அந்நாட்டு பொதுமக்கள் மெகா பேரணியை நடத்தினர். இதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
ஜிம்பாப்வே அதிபர் முகாபே தனது மனைவி கிரேஸை அடுத்த அதிபராக்க முயன்றார். அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த துணை அதிபர் எம்மர்சனையும் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார். மேலும், தனது குடும்பத்துக்கு எதிரான அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த ராணுவம், முகாபேவின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அண்மையில் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி அவரை வீட்டுச் சிறையில் அடைத்தது.
இதன் காரணமாக அந்நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வறுமை மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளை ஒழிக்க கவனம் செலுத்தாத முகாபேவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்றும், ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள ஹராரே நகரில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அதிபருக்கு எதிராக பேரணி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து முகாபேவை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்த 10 பிராந்திய தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் முகாபேவை வெளியேற்ற வேண்டும் என ஒன்பது பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தலைவர்கள் ஏற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.