சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.
பிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனம் தாமஸ் குக். 1841 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்துக்கான வசதிகளை செய்து வந்தது. இந்த நிறுவனம் சொந்தமாக விமான சேவையும் நடத்தி வந்தது. கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், கூடுதல் நிதி ஏற்பாடு செய்யமுடியாத நிலையில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சுமார் 6 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல்கேரியா, கியூபா, துருக்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேரை சொந்த நாட்டுக்கு கொண்டுவர பிரிட்டன் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. திவால் காரணமாக அந்த நிறுவனத்தில் 22,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இதற்கிடையில் பிரிட்டனின் தாமஸ் குக் நிறுவனத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தாம்ஸ் குக் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் பங்குகள், பங்கு சந்தையில் பாதிக்கப்பட்டது.