செய்தியாளர் - கார்த்திகேயன்
மிகமிக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷம்.. உலகில் உள்ள யாராலும் அந்த பொக்கிஷத்தை நெருங்கக் கூட முடியாது.. அப்படியே நெருங்கினாலும் அதனை பாதுகாக்கும் சில அம்சங்கள் நெருங்குபவர்களை எரித்து சாம்பலாக்கிவிடும்.. இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த பொக்கிஷங்களை கூட எளிதாக திருடும் கும்பல், போலீசிடம் இருந்து தப்பிக்கும் பல்வேறு சீரிஸ்களையும், சினிமாக்களையும் நாம் பார்த்து ரசித்திருப்போம்.
இவை நிஜத்தில் நடக்கவே நடக்காது என்றும் நினைத்திருப்போம். ஆனால், நமது நம்பிக்கையை பொய்யாக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்து, மூக்கின் மீது விரல் வைக்க வைத்துவிட்டது. அதாவது, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அலிகாண்ட்டே மாகாணத்தில், வில்லெனா முனிசிபல் என்ற தொல்லியல் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, வெண்கல காலத்தை சேர்ந்த வில்லெனா பொக்கிஷம் என்ற சிறப்பு தொகுப்பு ஒன்று உள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 10 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி, அம்பர் கற்களால் ஆன கிண்ணங்கள், பாட்டில்கள், 28-க்கும் மேற்பட்ட வளையல்கள் என 66 அசல் தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, இந்த தொகுப்பில் உள்ள சில பொருட்கள், விண்கற்களில் இருந்து கிடைத்த அரிதான உலோகங்களின் மூலம் தயாரிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.
ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய Pre - Historic தங்க பொக்கிஷமாக கருதப்படும் இதன் மதிப்பை கணக்கிடவே முடியாது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பொக்கிஷம், அதிநவீன வசதிகள், அலாரம் சிஸ்டம் போன்றவற்றை வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தி, இந்த அரிய பொக்கிஷத்தை, கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அருங்காட்சியகத்தில் கொள்ளை நடப்பதற்கு சற்று முன்பு, அதே நகரின் மற்றொரு பகுதியில் உள்ள விளையாட்டு மையம் ஒன்றில் தீ விபத்து நடந்தால் வரும் அவசரகால அலாரம் திடீரென எழுந்துள்ளது. காவல்துறையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றிய கொள்ளையர்கள், அருங்காட்சியகத்தின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை மின்னல் வேகத்தில் சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
திருடப்பட்ட இந்த பொக்கிஷத்தின் மதிப்பு, கள்ளசந்தையில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து, ஸ்பெயின் நாட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.