கொரோனாவால் நாள்தோறும் 800-க்கும் அதிகமானோர் இறக்கும் நியூயார்க் நகரில் உடல்களைப் புதைக்கவும், இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளவும் இடமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
உலகின் வர்த்தக மையம் அமைந்திருக்கும் நியூயார்க் நகரம் இப்போது கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ளது. நியூயார்க்கில் மட்டும் இதுவரை கொரோனாவினால் 18 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதால் உடல்களை வைப்பதற்கு இடமில்லாமல் உள்ளூர் நிர்வாகங்கள் திணறி வருகின்றன. பெரிய குழிகளில் மொத்தமாக உடல்கள் புதைக்கப்படுகின்றன.
இறுதிச் சடங்குகளைச் செய்யும் மையங்களில், குளிரூட்டப்பட்ட அறைகள் என அனைத்தும் நிரம்பிவிட்டன. சடலங்களை வைக்கும் பைகள் காலியாகிவிட்டன. அதனால் வேறு வழியில்லாமல், லாரிகளில் உடல்களை வைக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. புரூக்ளின் பகுதியில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பின் கட்டடத்துக்கு வெளியே, கடந்த சில வாரங்களாக ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது.
துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் அது குறித்துப் புகார் அளித்தனர். அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், சுமார் 40 அடி நீளமுள்ள அந்த லாரியில் ஒன்றின் மீது ஒன்றாக சுமார் 40 உடல்களை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் பிறகுதான் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பல லாரிகளில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பல நாள்கள் ஆனதால் உடல்கள் அழுகி, சாலைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இறுதிச் சடங்குகளைச் செய்யும் அமைப்புகள் மாத்திரமல்ல, சில மருத்துவமனைகளும் இதுபோன்ற முறையைக் கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறது. சட்டப்படி, உடல்களை இப்படி வைத்திருப்பது தவறு. ஆனால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறப்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கையறு நிலையில் தவித்து வருகிறது நியூயார்க் நிர்வாகம்.