உலகம்

சீனாவின் 'வைரல் ஸ்டார்'... நிலவு ஆய்வுக்கான 'சாங்கே-5' திட்டத்தின் நாயகி ஸூ செங்க்யூ!

sharpana

நிலவின் பாறை துகள்களை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட 'சாங்கே-5' திட்டத்தின் நாயகியாக கருதப்படும் 24 வயது இளம்பெண் ஸூ செங்க்யூவை சீன நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீனா 'சாங்கே - 5' என்கிற ஆளில்லா விண்கலத்தை சமீபத்தில் விண்ணில் செலுத்தியது. நிலவின் பாறை துகள்களை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. அதன்படி, சில நாட்களுக்கு முன் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 'சாங்கே - 5' விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறை துகள்களை சேகரித்தது. இந்தப் பயணத்தின்போது, சீனாவின் கொடி நிலவில் நாட்டப்பட்டது. அமெரிக்க தனது தேசியக் கொடியை முதன் முதலில் நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இந்த சாதனையை செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு பிறகு மூன்றாவது நாடாக இந்த சாதனையை செய்துள்ளது சீனா.

'சாங்கே-5' விண்கலம் இன்னும் சில நாட்களில் பூமியை வந்தடையும். அப்படி வெற்றிகரமாக வந்துவிட்டால் கடந்த 40 ஆண்டுகளில் சந்திரனில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்த திட்டமாக 'சாங்கே-5' திட்டம் வரலாற்றில் இடம்பெறும். இந்த வரலாற்று தருணத்திற்காக காத்திருக்கும் சீனா, தற்போது இதற்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்தியுள்ளது. சீனாவின் அரசு ஊடகத்தில் இந்த திட்டத்துக்கு பங்காற்றியவர்களை குறிப்பிட்டு கௌரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஸூ செங்க்யூ என்ற 24 வயது இளம்பெண்ணின் பெயரை 'சாங்கே-5' திட்டத்தில் சீன அரசு குறிப்பிட, தற்போது அவரை சீனா மக்கள் கொண்டாடி வருகின்றனர். சீனாவின் சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் ஸ்டார் இந்த ஸூ செங்க்யூ தான்.

சீன விண்வெளித்துறையில் விண்வெளி கமாண்டராக பணிபுரியும் ஸூ செங்க்யூ, 'சாங்கே-5' திட்டத்துக்காக ராக்கெட் கனெக்டர் சிஸ்டம் என்கிற முக்கியமான வேலையை முடித்துக்கொடுத்தார். இந்த தகவல் சீன அரசு ஊடகத்தில் குறிப்பிடப்பட, ஸூ-வின் திறமையை உச்சிமுகர்ந்தது பாராட்டுகிறார்கள் சீனர்கள். குறிப்பாக, சீனாவின் வெய்போ சமூக வலைதளத்தில் ஸூ-வின் பெயர் தான் சில நாட்களாக ட்ரெண்டிங்.

தற்போது வென்சங் விண்வெளி ஏவுதளத்தில் ஸூ செங்க்யூ பணிபுரிந்து வருகிறார். அங்குள்ளவர்கள் எல்லோரும் இவரின் திறமையை பார்த்து ஸூ-வை `பெரிய சகோதரி' என அழைத்து வருகின்றனர். இதற்கிடையே, ஸூ 'சாங்கே-5' திட்டத்துக்காக பணிபுரிவதை அறிந்த டுகாய் குய்சோ நெட் (Duocai Guizhou Net) என்கிற செய்தி நிறுவனம், அவரை பலமுறை தொடர்புகொண்டு பேட்டி கேட்டுள்ளது. ஆனால், தன் வேலையில், புகழ் குறுக்கிட்டு விடக்கூடாது என்று கூறி அந்த நேர்காணலை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்கிறார் என்று அதே டுகாய் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனால்தான் சீன மக்கள், நெட்டிசன்கள் அவரை பெருமை பொங்க பாராட்டி வருகின்றனர்.