உலகம்

குற்றம் செய்ததை உறக்கத்தில் உளறிய மனைவி: போலீசில் புகார் கொடுத்த கண்ணியமான கணவன்!

EllusamyKarthik

சிலர் ஆழ்ந்த நித்திரையின் போது தங்கள் மனதில் உள்ளவற்றை உளறுவது வழக்கம். அந்த வகையில் வீல் சேர் உதவியோடு இயங்கி வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்த பணிப்பெண் ஒருவர், தனது எஜமானிடமிருந்து பணத்தை திருடி உள்ளார். அதைதான் தூக்கத்தில் உளறியுள்ளார் அந்த பணிப்பெண். அதைக்கேட்டு அதிர்ந்த அந்த பணிப்பெண்ணின் கணவர் போலீசார் புகார் செய்துள்ளார். 

இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது. ஆண்டனி மற்றும் ரூத் ஃபோர்ட் தம்பதியர் கடந்த 2008-இல் முதன்முதலில் சந்தித்துள்ளனர். இருவரையும் இசை மீதான பேஷன் ஒன்றாக இணைத்துள்ளது. முதலில் சில காலம் டேட்டிங் செய்த அவர்கள் 2010-இல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். 

தான் வேலை செய்யும் இடத்திலிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 7,31,032 ரூபாயை ரூத் திருடியுள்ளார். இதனை தூக்கத்தில் உளறிய போது அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் அவர் 61 வயது கணவர் ஆண்டனி. 

அதைக்கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும். அதனால் அவரது குற்ற செயலுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கில் போலீசில் புகார் கொடுத்ததாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார். தனது மனைவி அதிகளவில் பணம் செலவிட்டு வருவதை கண்டு தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் 47 வயதான ரூத், தற்போது 16 மாத காலம் சிறைவாசம் அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.