கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க அமெரிக்கா கடற்படையை குவித்து வருகிறது. வெனிசுலா அருகே படைகள் குவிக்கப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. வெனிசுலா அதிபர் மதுரோ, அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக எச்சரிக்கிறார். இதனால் சர்வதேச கடல் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
லத்தின் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த போதைப் பொருட்கள் அனைத்தும் கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதைப் பொருள் கடத்தலை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதே சமயம், சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறார். தொடர்ந்து, வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்..
சமீபத்தில், கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த நீர்முழ்கி கப்பலை அமெரிக்க கடற்படை வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து மீண்டும் அதே வழியாக வந்த 10 க்கும் மேற்பட்ட படகுகளை அமெரிக்க கடற்படை வீரர்கள் தாக்கி அழித்தனர். இதில், பல கடத்தல்காரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி, வெனிசுலா அருகே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வருவது, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
குறிப்பாக, வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதலே அந்நாட்டுடன் அமெரிக்கா தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது..இதன் காரணமாக வெனிசுலா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது..அதே சமயம் அதிபரின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலை நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இப்படி பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமெரிக்க கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு’-ஐ, அதன் தாக்குதல் குழுவுடன் கரீபியன் கடலுக்குச் செல்லுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் முதலே கரீபியன் கடலில் தங்கள் படைகளைக் குவித்து வரும் அமெரிக்கா, தற்போது மேலும் எட்டு போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் எஃப்-35 ரக போர் விமானங்களையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது இதனால் சர்வதேச கடல் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வெனிசுலா அதிபர் மதுரோ பதிலடி கொடுத்துள்ளார். அதில், " தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவோம். தங்கள் நாடும் ராணுவப் படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது என எச்சரித்துள்ளார்.