டோக்லாம் எல்லையில் இருந்து சீனப் படைகள் அனைத்தும் பின்வாங்கியுள்ளதால் அங்கு நிலவி வந்த இரண்டரை மாத பதற்றம் தணிந்துள்ளது.
சீனாவின் 1,800 வீரர்களும் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளனர். அங்கு போடப்பட்டிருந்த குடில்கள், சீனக் கொடிகள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. சாலை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட புல்டோசர் இயந்திரங்களும் திரும்பக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியா தரப்பில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி தற்போது ராணுவமில்லா இடமாக மாறியுள்ளது.
டோக்லாம் பகுதியில் சாலை அமைப்பதற்காக சீனப் படைகள் மேற்கொண்ட முயற்சியை இந்தியா எதிர்த்ததால் கடந்த ஜூன் முதல் அங்கு பதற்றம் நிலவியது. இருநாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.