உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்ததை அமல்படுத்தவேண்டும் எனவும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்றும் ஐ.நா. பொதுசபை சிறப்புக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பொது சபையின் சிறப்பு அவசரக் கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் உக்ரைன் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியா குட்டரெஸ், உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி, உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டார். ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை எனவும், நேர்மையான தொடர் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே கருத்து வேறுபாடுகளை களையமுடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.