உலகளவில் அதிகம் பிரபலம் வாய்ந்த வீடியோ கேம் தொடராக GTA என அழைக்கப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto - GTA) திகழ்ந்து வருகிறது. 1997-ம் ஆண்டு இந்த கேம் தொடரின் முதல் வெர்சன் வெளியிடப்பட்ட நிலையில், அப்போதே அது பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2002-ம் ஆண்டு வெளியான நான்காம் வெர்சனான GTA Vice City கேமிங் உலகையே புரட்டிப்போட்டது.
பிரிட்டிஷ் நிறுவனமான ராக்ஸ்டார் நார்த் (Rockstar North) நிறுவனம் உருவாகும் இந்த கேம்களின் வெர்சன்கள் குறிப்பிட்ட ஒரு கற்பனை நகரை மையமாக வைத்து உருவாக்கப்படும். உலகம் முழுவதும் 38 கோடிக்கும் அதிகமான GTA கேம் பிரதிகள் விற்பனையாகியுள்ள நிலையில், இதுவே உலகில் அதிகம் விற்பனையான, கேம் தொடராக திகழ்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு GTA-வின் ஐந்தாவது வெர்சன் வெளியான நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் GTA-வின் ஆறாவது வெர்சனின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 19-ம் தேதி PS5 மற்றும் Xbox Series X|S கன்சோல்களில் GTA 6 கேம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி இதற்கான முன்கூட்டிய பதிவிறக்கம் (Preload) தொடங்கப்பட்டது.
212 GB டேட்டா கொண்ட இந்த வீடியோ கேமை பதிவிறக்கம் செய்ய ஒரே நேரத்தில் உலகின் பலகோடி பேர் முயற்சித்த நிலையில், பல்வேறு இடங்களில் இணைய செயல்பாடு பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் முன்னணி இணைய சேவை நிறுவனமான Virgin Media-வின் டேட்டா பயன்பாடு GTA 6 பதிவிறக்கம் வெளியான நாளில் 51% அதிகரித்ததாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.
அதேப் போல ஐரோப்பாவின் பிரபல இணைய சேவை நிறுவனமான Global Connect நிறுவனம் GTA 6 பதிவிறக்கம் வெளியான நாளில் இணையப் பயன்பாடு வழக்கத்தை விட 50% அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இணைய வேகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஏராளமான இணைய சேவை நிறுவனங்கள் பயனாளர்கள் GTA 6 கேமை பதிவிறக்கம் செய்ய சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளன.
வரும் நவம்பர் 19-ம் தேதி GTA 6 கேம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த கேமின் பதிவிறக்கம் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை இணைய சேவை நிறுவனங்கள் தற்போதே தொடங்கியுள்ளன.