elephant
elephant ptweb
உலகம்

“பட்ட காயம் எத்தனையோ ராசா..” - குழியில் சிக்கிய குட்டியானையை மீட்கும் பரபரப்புக் காட்சிகள்!

Angeshwar G

பிரம்மாண்டத்தின் அடையாளம் யானைகள். பார்க்க பார்க்க அலுக்காத உயிரினம். உலகில் 24 வகைகளில் இருந்த யானைகள் தற்போது இரண்டு வகையாக, அதாவது ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டும் இருப்பது நமது துரதிர்ஷ்டம்.

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பது பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோனின் கருத்து. ஏனெனில் பூமியில் குறிப்பிட்ட பரப்பளவில் காடுகள் உருவானதற்கு யானைகளின் பங்கு மிக முக்கியமானது. இயற்கையின் அரணாக காடுகளின் பாதுகாவலனாக இருந்த யானைகளின் வலசை பாதைகளை ஆகிரமித்து அதற்கு உணவு நீர் போன்றவை கிடைக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதில் முழு முதற்காரணமும் மனிதர்கள் மட்டுமே.

இதில் அரசாங்கத்தையும் ஆக்கிரமிப்பாளர்களையும் குற்றம் சாட்டுவதை தாண்டி அனைத்து மக்களும் அதற்கான பங்குள்ளது. உலகம் முழுதும் யானைகளுக்கான தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் சூழலில் யானைகள் சந்திக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை.

மின்வேலியில் சிக்கி உயிரிழப்பது, காடுகளில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள் குத்தி காயம் ஏற்பட்டு அவதிப்படுவது, ரயில்களில் மோதி உயிரிழப்பது, தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது என என்னெற்ற சிக்கல்களை நாள்தோறும் கடக்கிறது யானைகள். இதைத் தாண்டி நீருக்காகவும் உணவுக்காகவும் அல்லல்படுவது தனி.

அங்கொன்றும் இங்கொன்றுமாக யானைகள் தினமும் பாதிக்கப்படும் சூழலில், மக்களின் கவனத்துக்கு வருவது வெகு சில தான். அந்தவகையில் குட்டியானை ஒன்று மழை நீர் தேங்கிய குட்டையில் விழுந்து வெளி வர முடியாமல் போராடியதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் சிரத்தையுடன் யானைக் குட்டியை மீட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொலநறுவை மாவட்டம் மெதிரிகிரிய பகுதியில் மழைநீரால் நிரம்பி இருந்த குழியில் யானை குட்டி ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது. நெடுநேரமான மேலே வர யானை முயற்சித்தும், அதனால் வெளியில் வர முடியவில்லை. மழையின் ஈரம் சுற்றிலும் இருந்ததாலும், குழி செங்குத்தாக இருந்ததாலும் யானையால் வெளியில் வர முடியவில்லை.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் யானையை மீட்க முடிவெடுத்தனர். அவர்களது முயற்சியும் நெடுநேரம் பயனளிக்காத நிலையில் ஜேசிபி இயந்திரத்துடன் யானையை மீட்க முயற்சி செய்தனர். முதலில் ஜேசிபி இயந்திரம் யானை நடந்து வருவதற்கு ஏதுவாக சரிவான பாதையை அமைத்தது. பின், குழியில் இறங்கிய நபர் யானையை சுற்றி கயிறால் கட்ட முயற்சித்தார். கயிறு கட்டப்பட்டதும் மேல் இருந்தவர்கள் கயிறை இழுக்க குழியில் இருந்தவர் யானை மேல் ஏறுவதற்கு ஏதுவாக தூக்கி விட பெரும் முயற்சிக்கு பின் யானை மேலே கொண்டு வரப்பட்டது, இதனைத் தொடர்ந்து வன அதிகாரிகள் யானையை கொண்டு சென்றனர்.

யானை மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.