கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியது. அதோடு உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர் நாடியான ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது.
இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய்க்கு பெரும் தேவை ஏற்பட்டு அதன் விலை பீப்பாய்க்கு 120 டாலர்களை எட்டியது. இதனால் பல்வேறு நாடுகளிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தச் சூழலில் அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8.6% சரிந்து பேரல் 94.66 அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றியால், டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஈரானுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்தவும், போரை முடிவுக்குக் கொண்டுவரக்க்கூடிய கட்டாயமும் அமெரிக்க அரசுக்கு ஏற்படும். இதனால் இந்தப் போர் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல ஈரான் தரப்பிலும் சுமுகமான மாற்றங்கள் ஏற்பட்டு, இந்தியா, சீனா மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியே செல்லத் தடைகளைத் தளர்த்தியது. இதுவும் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது உலக பொருளாதார மந்தநிலையை மாற்றி பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.