உலகம்

சர்வதேச சந்தையில் 100 டாலருக்கு கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

ச. முத்துகிருஷ்ணன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சரிந்த நிலையில், தற்போது 2 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

2 மாதங்களுக்குப் பிறகு WTI (West Texas Intermediate) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் நேற்றிரவு வர்த்தகத்தில் 100 டாலருக்கும் கீழ் குறைந்தது. WTI கச்சா எண்ணெய் விலை 10 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு ஒரு பீப்பாய் 97.43 டாலராக சரிந்தது.

அதேபோல, பிரென்ட் வகை கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் 101 டாலர் என குறைந்தது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கணித்திருப்பதே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, எண்ணெய் வள நாடுகளிம் கூட்டமைப்பான ஒபெக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இன்று காலை சர்வதேச சந்தையில், பிரென்ட் கச்சா விலை ஒரு பீப்பாய் சுமார் 2 சதவிகிதம் உயர்ந்து 105 டாலரிலும், WTI வகை கச்சா எண்ணெய் விலை 2 சதவிகிதம் அதிகரித்து 101.58 டாலரிலும் வர்த்தகமாகின்றன.