உலகம்

பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

webteam

அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துச் சென்று உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்த நபருக்கு  5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட லாரன்ஸ், தன்னுடைய அத்தை, மாமா மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான ஒரு மாதத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் (41) என்ற பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார். பின்னர், அதனை தனது வீட்டிற்குக் கொண்டு சென்று உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்துள்ளார்.

அதன்பின்னர் அந்த உணவை, தனது வீட்டில் இருந்த மாமா லியோன் பை, அத்தை டெல்சி பை, அவர்களுடைய குழந்தை கேயோஸ் யேட்ஸ் ஆகியோருக்குப் பரிமாறியுள்ளார். ஆனால், அவர்கள் சாப்பிட மறுத்ததுடன், இந்த உணவால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், லாரன்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த லாரன்ஸ், அவர்களைக் கொலைவெறியொடு தாக்கியுள்ளார். இதில் மாமா லியோன் பை மற்றும் அவரது குழந்தை கேயோஸ் யேட்ஸ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரது அத்தை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் லாரன்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என்றாலும், இவ்வழக்கு விசாரணையில், தற்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி, கிரேடி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல் முயற்சி குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண்டைந்தார். இதையடுத்து, தீர்ப்பில் லாரன்ஸுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

- ஜெ.பிரகாஷ்