Myanmar military has currently achieved a major victory  Reuters
உலகம்

மியான்மர் உள்நாட்டுப் போர் : மாபெரும் வெற்றியை பெற்ற ராணுவம்.. பின்னணியில் செயல்பட்ட சீனா!

மியான்மரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது மியான்மர் ராணுவம் மிகப்பெரும் வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.

Praveen Joshva L

மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி ((Aung San Suu Kyi) . இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்த நாட்டில் பல ஆண்டுகளாக புரட்சி படையினர் போராடி வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டு 3 கிளர்ச்சிப் படையினர் மியான்மர் ”மூன்று சகோதரத்துவக் கூட்டணி” (Three Brotherhood Alliance) என்ற பெயரில் ஒன்று சேர்ந்தனர்.

Rebels in myanmar

அதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி ராணுவத்தின் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை புரட்சிப்படையினர் தாக்கி கைப்பற்றி வந்தனர். தொடர்ந்து முன்னேறி வங்கதேச எல்லை பகுதி முழுவதையும் புரட்சி படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இது மியான்மர் ராணுவத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில், மியான்மரின் தெற்குப் பிராந்தியமான கயின் (Kayin / Karen State) மாநிலத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு மையங்களை இலக்கு வைத்து ராணுவம் தீவிர வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் மூன்று சகோதரத்துவக் கூட்டணியின் முக்கிய இராணுவக் கட்டளை மையத்தையும், 10 முகாம்களையும் ராணுவம் தன்வசப்படுத்தியுள்ளதாக மியான்மர் ராணுவ அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளை இழந்து தவித்து வந்த மியான்மர் ராணுவத்திற்கு, தெற்குப் பகுதியில் கிடைத்துள்ள இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மியான்மரின் ராணுவ அரசுக்கு சீனா பெரிய அளவு உதவிகள் செய்து வரும் நிலையில், இந்த வெற்றியின் பின்னால் சீன அரசின் உளவுத்துறையும், ஆயுத விநியோகமும் உள்ளதாக பார்க்கப்படுகிறது. மியான்மர் ராணுவத்திற்குத் தேவையான FTC-2000G ரகப் போர் விமானங்கள், தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் விமானப் பாகங்களைச் சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.