குரங்கு செல்ஃபி புகைப்படம் தொடர்பான சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2011ம் ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கு ஒன்றின் செல்பி புகைப்படம் உலக அளவில் மிகப் பிரபலமானது. டேவிட் ஸ்லேட்டர் கேமராவால் எடுத்த அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படம் பல கோடி நபர்களால் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டது. டேவிட் ஸ்லேட்டர் ஒரு அசைன்மென்ட் தொடர்பாக அங்கு சென்றிருந்த போது, நாருடோ என்ற அந்தக் குரங்கு அவரது கேமராவில் தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்டது.
பிரபலமான அந்த செல்பி புகைப்படத்தை விக்கிபிடியா தனது பொதுத்தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிபிடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் டேவிட் வலியுறுத்தியிருந்தார். ஆனால் விக்கிபிடியாவோ, ஸ்லேட்டரின் காமராவைப் பறித்துக்கொண்ட ‘நாருடோ’ என்ற மக்காக் இன குரங்கு தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது.. அதனால் டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது என்று தெரிவித்துவிட்டது.
இதனிடையே, புகைப்படத்தின் மூலம் குரங்கும் பயனடைய வேண்டும் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா கூறியிருந்தது. "குரங்கு சார்பாக" பீட்டா நீதிமன்றத்தையும் நாடியது. இந்நிலையில் வருங்காலத்தில் இந்தப் புகைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை தானம் செய்ய புகைப்பட கலைஞர் டேவிட் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 25 சதவிகித வருமானத்தை 'நாருடோ’ வின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு புகைப்படகலைஞர் டேவிட் அளிப்பார் என்று பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.