70 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமிக்கு நிலவு என்ற ஒரே ஒரு துணைக்கோள் மட்டும்தான் இருந்தது. ஆனால், இன்று விண்வெளியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வலம் வருகின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், சுமார் 10,000 செயற்கைக்கோள்கள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமானவை. மேலும், ஒரு தரவு மைய மெகா கட்டமைப்பை உருவாக்க, கூடுதலாக ஒரு பத்து லட்சம் செயற்கைக்கோள்களை ஏவ அவர் திட்டமிட்டுள்ளார். செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை இவ்வாறு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால், விண்வெளிக் கழிவுகளின் பேராபத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தற்போது விண்வெளிப் பாதையில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவுள்ள 36 ஆயிரம் கழிவுப் பொருட்களும், பல கோடி நுண்ணிய துகள்களும் சுழன்றுகொண்டிருக்கின்றன. இக்கழிவுகளின் மொத்த எடை சுமார் 13 ஆயிரத்து 486 டன்களாகும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளே இந்த விண்வெளிக் கழிவுகளுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தக் கழிவுகள் விநாடிக்குச் சராசரியாக 7 கிலோமீட்டர் என்ற கற்பனை செய்ய முடியாத அதிவேகத்தில் பயணிப்பதால், செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இது கெஸ்லர் சிண்ட்ரோம் எனப்படும் சங்கிலித் தொடர் மோதல் ஆபத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வதையே முற்றிலும் தடுத்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையம் ஆண்டுக்கு ஒருமுறையாவது இத்தகைய மோதல்களைத் தவிர்க்க தன் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது, எலான் மஸ்க்கின் ஒரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வீதம் தினமும் வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிறது. இது பூமியின் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் கரியமிலத் துகள்களை உருவாக்குகிறது. இதற்குக் கூட்டுத் தீர்வாக, கழிவுகளை அகற்றும் வலைகள், காந்தங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆயுள் முடிந்த விண்கலங்களை அழிப்பதற்கான காலக்கெடு 25 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
விண்வெளியை வெறும் வணிகப் போட்டியாகப் பார்க்காமல், பூமியைப் போன்றதொரு சுற்றுச்சூழல் மண்டலமாகப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்பதே தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது.