இந்தோனேஷியாவில் ஓடும் ரயிலுக்குள் புகுந்த பாம்பை பயணி ஒருவர் வெறும் கையால் பிடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ பாம்பைப் பிடித்த ஹீரோ என்ற பெயரில் தற்போது பரபரப்பாகப் பரவி வருகிறது.
போகோரில் இருந்து ஜகார்த்தாவிற்கு சென்று கொண்டிருந்த ரயிலுக்குள் கடந்த வாரம் 3 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ரயிலின் மேற்கூரைக்குள் இருந்தது. இதனைக்கண்ட பயணிகள் அலறியடித்தப்படி கத்தினர். தகவலறிந்து ரயிலை நிறுத்திய காவல் துறையினர் அந்த பாம்பை பிடிக்க முயற்சித்தனர். அப்போது ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், எந்தவித அச்சமும் இன்றி பாம்பை வெறும் கையால் பிடித்து தரையில் அடித்துக் கொன்றார். அவரின் இந்த துணிகரச் செயலை கண்ட பயணிகள் அவரை வெகுவாக பாரட்டினார். சக பயணியின் பையில் இருந்து அந்த பாம்பு தப்பி வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனிடைய அந்த ரயில்வே நிர்வாகம், வெறும் கையால் பாம்பை அடித்துக் கொன்ற பயணியின் வீடியோவை 2 நாட்களுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பதிவிட்டப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளங்களில் பாம்பை பிடித்த ஹீரோ என்ற பெயரில் இந்த வீடியோ அதிகம் பரவி வருகிறது.