உலகம்

‘தி கிரே மேன்’ வாய்ப்பு குறித்த தனுஷ் பேச்சால் அதிர்ந்த அரங்கம் - படம் எப்படி இருக்கு?

சங்கீதா

நெட்ஃபிளிக்ஸின் ‘தி கிரே மேன்’ திரைப்பட வாய்ப்பு குறித்து நடிகர் தனுஷ் அளித்த விளக்கத்தைக் கேட்டு, சக நடிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில், தற்போது உருவாகியுள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ படத்தை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தான் ‘தி கிரே மேன்’.

இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படம் குறிப்பிட்ட சில திரையரங்குகளில், ஜூலை 15-ம் தேதியும், ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாகவும் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் ஜேக்கப் தி ஹன்டர் எனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த விமர்சகர்கள், படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், தனுஷின் நடிப்பு மொத்தப்படத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தம்ஸ் அப் கொடுக்கும் வகையிலும் இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சக நடிகர்களுடன், தனுஷும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், இந்தப் படத்தில் நான் எப்படி நடித்தேன் எனத் தெரியவில்லை என்று கூறியதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. பின்னர் தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள காஸ்டிங் ஏஜென்சி என்னிடம் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள். பெரிய படம் என்றார்கள். எந்தப் படம், என்னப் படம் என்று நான் கேள்வி எழுப்பியபோது, அதனை சொல்வதற்கு முதலில் உங்கள் அனுமதி வேண்டும் என்று கூறினர்.

பின்னர் அவர்கள் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் சரி என்று சொன்னேன், இதனைவிட பெரிதாக எனக்கு கிடைக்காது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் அதிக காட்சிகளில் நான் இல்லை. ஆனால் நான் மிகவும் சிலிர்ப்பாக இருந்தேன். மேலும் தெரிந்து கொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.