The extreme humiliation faced by Israel on the UN stage  Reuters
உலகம்

இஸ்ரேலுக்கு உச்சகட்ட அவமானம் : ஒரே நொடியில் ஆவேசமான நெதன்யாகு.. நடந்தது என்ன ?

ஐ.நா மேடையில் இஸ்ரேலுக்கு நேர்ந்த உச்சகட்ட அவமானம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்த நிலையில், நியூயார்க் ஐ.நா. பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்றும் போது பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிநடப்பு செய்தன. இதனால் இஸ்ரேலுக்கு கடும் அவமானம் ஏற்பட்டது. கோபமடைந்த நெதன்யாகு, அரங்கில் இருந்தவர்களையே தார்மீகக் கோழைகள் என சாடி, வெளியேறச் சவால் விட்டார்.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் வெடித்த நிலையில், தற்போதுவரை அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் படைகள் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காசா நகரில் நுழைந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது.

பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நாடுகள் கூட இஸ்ரேலின் இந்த செயலுக்கு பின்னர் அந்த நாட்டுக்கு எதிராக திருப்பியுள்ளன.

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் உரையாற்ற அழைக்கப்பட்டபோதே கூட்ட அரங்கில் இருந்து பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ய தொடங்கினர். மேலும் சில நாடுகளின் பிரதிநிதிகள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் நெதன்யாகு, அரங்க மேடையிலேயே அரங்கில் இருந்து வெளியேறியவர்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த அரங்கிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் தார்மீகக் கோழைகள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து இப்போதே வெளியேறுங்கள் என்றும் அவர் காட்டமான கருத்துக்களை தெரிவித்தார். ஐ.நா அவையில் ஒரு நாட்டின் தலைவர் உரையாற்றும்போது பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறுவது அந்த நாட்டுக்கு பெரும் அவமானமான செயலாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது