devastating Thanksgiving storm in united States Reuters
உலகம்

ஒரே நேரத்தில் பெருவெள்ளம், புயல் காற்று, பனிப்பொழிவு : பேரழிவை ஏற்படுத்திய Thanks Giving புயல்!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக பெருவெள்ளம், புயல் காற்று, தீவிர பனிப்பொழிவு ஆகியவை ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த நாட்டையும் துவம்சம் செய்துள்ளது.

Praveen Joshva L

தேங்க்ஸ்கிவிங் பண்டிகை நாளில் அமெரிக்காவின் பல பகுதிகளில் 'நார்-ஈஸ்டர்' புயல் தாக்கம். மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியது, மின்சாரம் துண்டிப்பு, கடல்சீற்றம், பனிப்பொழிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரழிவுகளை ஏற்படுத்தியது. பல இடங்களில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில், புயல் காரணமாக அமெரிக்காவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை அமெரிக்கா மற்றும் கனடாவில் தேங்க்ஸ்கிவிங் (Thanksgiving) என்ற நன்றி தெரிவிக்கும் அறுவடைப் பண்டிகை கொண்டாடப்படும். அமெரிக்காவில் அரசு விடுமுறை தினம் என்பதால் கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்ளும் மிகப் பெரிய பயணக் காலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இந்த கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் மத்தியப் பகுதிகளை வலிமையான 'நார்-ஈஸ்டர்' (Nor'easter) புயல் தாக்கி வருகிறது. தேங்க்ஸ்கிவிங் விடுமுறை நாளில் இந்த புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை அமெரிக்க ஊடகங்கள் தேங்க்ஸ்கிவிங் புயல் என அழைத்து வருகின்றன.

குளிர்-பருவப் புயலான இந்த 'நார்-ஈஸ்டர்' (Nor'easter) புயல் காரணமாக நியூயார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் அளவுக்கு புயல்காற்று வீசியது. மேலும் வட கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, மேரிலாந்து, வர்ஜீனியா, நியூயார்க் மற்றும் மிசோரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது.

புயல் மேலும் தீவிரமடையும் என்பதால் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய புளோரிடா பகுதிகளில் புயல் காரணமாக கனமழை பெய்ததால் மியாமி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு கடந்த வியாழக்கிழமை மட்டும் அமெரிக்காவில் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தால் கிழக்கு மிசோரி, டென்னிசி ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் தீவிர பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. அங்கு பல இடங்களில் ஒரு அடிக்கும் மேலாக, அதவாது 12 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக அமெரிக்காவில் பல பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கனமழை, கடல்சீற்றம், புயல் காற்று, கடும் பனிப்பொழிவு ஆகியவை ஒரே நேரத்தில் ஏற்பட்டு அமெரிக்காவையே முடக்கியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.