உலகம்

தினமும் வித்தியாசமாக பணியாற்றினால் ரூ.3.87 லட்சம் போனஸ் வழங்கும் லாஸ் வேகாஸ் நிறுவனம்!

ச. முத்துகிருஷ்ணன்

தினமும் வித்தியாசமாக பணியாற்றியதற்காக தனது 5,400 பணியாளர்களுக்கு ரூ.3.87 லட்சம் வழங்கியுள்ளது லாஸ் வேகாஸில் உள்ள தி காஸ்மோபாலிட்டன் நிறுவனம்!

போனஸ் என்பது ஒரு நிறுவனம் ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக வழங்கப்படும் சம்பளத்திற்கான பாராட்டு ஆகும். லாஸ் வேகாஸில் உள்ள ஒரு சூதாட்ட விடுதி அதன் 5,400 பணியாளர்களுக்கு $5,000 போனஸ் (ரூ. 3.87 லட்சம்) கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. தி காஸ்மோபாலிட்டன் எனும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பில் மெக்பீத் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஊழியர்கள் மகிழ்ச்சியில் கண்ணீரில் மூழ்கினர். அனைத்து 5,400 ஊழியர்களுக்கும் போனஸிற்கான மொத்த செலவு $27 மில்லியன் (ரூ. 208 கோடி) ஆகும்.

தி காஸ்மோபாலிட்டனின் தலைமை மக்கள் அதிகாரியான டேனியல் இ எஸ்பினோ, "ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் அறைகளைச் சுத்தம் செய்தாலும், உணவு சமைத்தாலும், அட்டைகளை விநியோகித்தாலும், பானங்கள் விற்பனை செய்தாலும் அல்லது முன் மேசையில் வேலை செய்தாலும் சரி, அனைத்திலும் வித்தியாசமாக பணியாற்றி உள்ளீர்கள். அதற்காக இந்த வெகுமதி" என்று கூறினார்.

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழின் சிறந்த வேலையளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக லாஸ் வேகாஸின் காஸ்மோபாலிட்டனை தேர்வு செய்து இருந்தது. 2020 ஆம் ஆண்டில், தி காஸ்மோபாலிட்டன் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக மனித உரிமைகள் பிரச்சாரத்தின் "வேலை செய்வதற்கான சிறந்த இடங்கள்" என்பதில் முதலிடத்திற்கான மதிப்பெண்ணைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.