செய்தியாளர் - கார்த்திகேயன்
அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதியில் தீவிர வானிலை அமைப்பு உருவானது. இது வலுப்பெற்று, நார் ஈஸ்டர் எனப்படும் சக்தி வாய்ந்த குளிர்கால கடலோரப் புயலாக , கடந்த நவம்பர் 25-ஆம் தேதி அன்று உருவானது. தேங்ஸ்கிவ்விங் விடுமுறை நாளான நவம்பர் 26-ஆம் தேதி மிகவும் வலுப்பெற்ற இந்த புயல், வடக்கு கரோலினா கடற்கரை பகுதியில், கரையை கடந்தது. மணிக்கு சுமார் 117 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலால், கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் Thanksgiving விடுமுறையின்போது தாக்கிய கடுமையான புயல், பல மாகாணங்களை நிலைகுயைச் செய்துள்ளது.
கனமழை, வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று, பனிப்பொழிவு என்று அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 9 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மிசோரி மாநிலத்தின் சில பகுதிகளில், 38 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பனியின் பாரம் தாங்காமல் வென்ட்ஸ்வில்லே பகுதியில் உள்ள பனிச்சறுக்கு அரங்கத்தின் கூரையும் இடிந்து விழுந்துள்ளது.
கலிபோர்னியாவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளிலும் வெள்ளபபெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில இடங்களில் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது புயலின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சாரம் மற்றும் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், நியூஜெர்சி முதல் வர்ஜீனியா வரையிலான கடற்கரைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. Thanksgiving விடுமுறையைக் கொண்டாடத் தயாரான அமெரிக்க மக்களுக்கு, இந்தப் புயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.