thailand reuters
உலகம்

7 பேர் பலி.. 10 பேர் படுகாயம்.. மாணவர் நடத்திய கொடூரத் தாக்குதல்.. தாய்லாந்து பள்ளியில் சோகம்!

தாய்லாந்தின் ஓர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

தாய்லாந்தின் பாங்காக்கிற்கு வடமேற்கே உள்ள நொந்தபுரி மாகாணத்தின் பாங் குருவாய் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில், 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே, இந்த செயலை நடத்தியிருப்பதாகவும், அவர் பிற நபர்களை நோக்கி 26 முறை சுட்டதாகவும், மேலும் 34 தோட்டாக்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தவிர, இந்தக் கொடூரத்தை அரங்கேற்றிய அந்த பள்ளி மாணவர், அதற்கு முன்பு தனது தாத்தா பாட்டியை அவர்களது வீட்டில் சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

thailand

இறுதியில், அந்தப் பள்ளி மாணவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சிலரோ, காவல்துறையினர்தான் அவரைச் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த உறுதியானத் தகவலும் வெளியாகவில்லை. விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட மாணவர், பள்ளிப்படிப்பு தொடர்பாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் துப்பாக்கி வைத்திருப்போரின் விகிதம் தாய்லாந்தில் மிக அதிகமாக உள்ளது. அங்கு ஒவ்வொரு ஏழு குடிமக்களுக்கும் ஒன்று என்ற விகிதத்தில், சுமார் 10 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளியில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து புதிய துப்பாக்கிச் சட்டம் கொண்டுவரப்படும் என தாய்லாந்து பிரதமர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர், “புதிய சட்டத்தின்படி, பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். ஆனால், முன்மொழியப்பட்ட அந்தச் சட்டம் துப்பாக்கி உரிமைக்கான நிபந்தனைகளைக் கடுமையாக்குமா என்பது குறித்த எந்தவொரு குறிப்பிட்ட விவரங்களையும் அவர் வழங்கவில்லை.