உலகம்

குகைக்குள் சிக்கிய சிறுவர்களுக்காக உயிரை தியாகம் செய்த வீரர்

webteam

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். தாய்லாந்து ராணுவமும், கடற்படையும் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தின. இந்த விவகாரம் சர்வதேச அளவிலான செய்தியாக மாறியுள்ளது. பல அனுபவம் வாய்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சமன் குனொந்த் என்ற முன்னாள் கடற்படை வீரர், தாமாக முன் வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மூழ்கு நீச்சலில் அனுபவம் மிக்கவரான அவர், குகையில் சிறுவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டு திரும்பும் போது போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூழ்கு நீச்சலில் அனுபவம் மிக்க ஒருவரே இந்த நிலைக்கு ஆளாகி இருக்கும் போது, சிறுவர்களை இந்த குகையில் இருந்து எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேவேளையில் மீட்பு பணி முழுவீச்சில் நடப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.