தாய்லாந்து - கம்போடியா மோதல் முகநூல்
உலகம்

தாய்லாந்து - கம்போடியா மோதல் | இருநாட்டு சண்டைக்கு ஒரு சிவன் கோயில்தான் காரணமா? விரிவாக பார்க்கலாம்!

தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் நீடிக்கும் சூழலில், அதற்கு காரணமாக கூறப்படுவது ஒரு சிவன் கோயில். அக்கோயிலுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை சற்று விரிவாக பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்கள் - பாலவெற்றிவேல், தமிழரசன்

தென் கிழக்கு ஆசிய நாடுகளாக இருக்கும் தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாகவே இருக்கும் நிலையில், அதற்கு காரணம் கிபி 11ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன்கோயில்தான் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

ப்ரே விஹார்

பல நூற்றாண்டுகளாக இந்த கோயிலை இரண்டு சமூகங்கள் சொந்தம் கொண்டாடிவந்த நிலையில், தற்போது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினையாக அது மாறியுள்ளது. தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவர்களின் கலாச்சாரம், கலை, பண்பாட்டோடு கிழக்கு ஆசியாவில் புதிய பண்பாடு தொடங்கியது.

அது கெமர், ஸ்ரீ விஜயா போன்ற பேரரசுகள் உருவாக வழி வகுத்தது. இதில் கெமர் பேரரசின் புகழ்பெற்ற அரசனான முதலாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோவில்தான் ப்ரே விஹார்.

தமிழ் தொடர்புகள் இருந்த காரணத்தினால் இந்த சிவனுக்கு சிகரேஸ்வரன் என பெயர் சூட்டப்பட்டது. டாங்க்ரேக் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தக் கோயில் ஒன்பது நூற்றாண்டுகளாக கிமர் மற்றும் சயன் இன மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. நாளடைவில் தென்கிழக்கு ஆசியாவில் புத்த மதம் வலிமை மிக்கதாக மாறிய பின்னர் ப்ரே விஹார் கோயிலில் புத்த மதம் தொடர்பான சடங்குகள், வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் எல்லைகள்

1907இல் பிரான்சின் காலனி ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் எல்லைகள் பிரிக்கப்பட்டது. நதி மற்றும் மலைச்சிகரங்களை இரு நாடுகளுக்கும் பகிரும் வகையில் எல்லைகள் பிரிக்கப்பட்டாலும் கோயில் பகுதி கம்போடியாவின் வசமே இருந்தது. ஆரம்பத்தில் இதனை தாய்லாந்து ஏற்றுக்கொண்டாலும், நாளடைவில் கலாச்சார மற்றும் இயற்கை கொடைகள் பெரிதும் கொண்ட இந்த பகுதியை இழந்து விட்டதாக கருதியது.

அதுவே இருநாடுகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. சர்வதேச நீதிமன்றம் வரை சென்று கம்போடியா தனது உரிமைகளை பெற்றுக்கொண்டாலும், தாய்லாந்து அதனை ஏற்க மறுத்து சண்டையிட்டு வருகிறது.

எனினும், இந்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும் என கம்போடியா வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.