உலகம்

தாய்லாந்து: காவலரின் வீட்டில் திருடச்சென்று, படுத்து உறங்கியதால் மாட்டிக்கொண்டத் திருடன்

Sinekadhara

தாய்லாந்தில் திருடச்சென்ற வீட்டில் தூங்கிய திருடனை போலீஸார் தட்டி எழுப்பி கைதுசெய்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

தாய்லாந்தில் 22 வயதான அதித் கின் குந்துத் என்ற இளைஞர் நேற்று இரவு 2 மணியளவில் திருடுவதற்காக ஒரு வீட்டில் கதவை சத்தமின்றி உடைத்து உள்ளே சென்றுள்ளார். ஓர் அறைக்குள் சென்று பொருட்களை எடுத்த அதித்திற்கு அதிக களைப்பாக இருந்ததால் வீட்டின் உரிமையாளர் எழுந்திருப்பதற்கு முன்பு எழுந்து சென்றுவிடலாம் என நினைத்து, அந்த அறையில் ஏசியை போட்டுவிட்டு நன்கு படுத்து உறங்கியிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக அந்த வீடு விசியான் பூரி மாவட்ட காவல் அதிகாரி ஜியாம் ப்ரசெர்ட்டின் வீடு. பொழுதுவிடிந்தது கூட தெரியாமல் அதித் நன்றாக தூங்கியிருக்கிறார். காலையில் எழுந்த காவல் அதிகாரி ஜியாம், தனது மகளின் அறையில் ஏசி ஓடிக்கொண்டிருந்ததை கவனித்திருக்கிறார். தனது மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏசி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, யாரோ அடையாளம் தெரியாத நபர் வசதியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த ஜியாம், மற்ற காவலர்களை அழைத்திருக்கிறார். யாரோ ஒருவர் எழுப்பும் சத்தம்கேட்டு எழுந்த அதித், அந்த அறைமுழுவதும் காவலர்களால் நிறைந்திருந்ததை கண்டு குழப்பமடைந்தார். அதித்தை கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இதேபோன்ற சம்பவம் ஆந்திராவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.