உலகம்

`சுத்தமான காற்று வேணுமா? எங்கிட்ட வாங்க! ஆனா...’- கண்டிஷன் போட்டு காசு பார்க்கும் நபர்!

webteam

தாய்லாந்தில் சுத்தமான காற்றை ரூ.2,500க்கு விற்பனை செய்யும் நபரின் சம்பவம், கவனம் பெற்று வருகிறது.

தாய்லாந்தில் சமீபகாலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இது, அம்மக்களுக்கு அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தாய்லாந்து அரசு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்தைச் சேர்ந்த டசிட் கச்சாய் என்ற 52 வயது நபர், அவர் பண்ணையில் இருந்து கிடைக்கும் தூய்மையான காற்றை விற்பனை செய்து வருகிறார். இதன்மூலம், வருமானத்தையும் அள்ளி வருகிறார்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் ஆசியன் லைஃப் என்ற சுற்றுச்சூழல் குழுவை நடத்தும் கச்சாய்க்கு சொந்தமாக பு லென் கா தேசியப் பூங்கா ( Phu Laen Kha National Park) அருகில் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த இடம், தூய்மையான காற்று, காடுகள் மற்றும் மலை நீரோடைகளுக்குப் பெயர் பெற்றது. இதையடுத்தே அங்கிருந்து வரும் தூய்மையான காற்றை விற்பனை செய்கிறார். முதல் ஒரு மணி நேரத்திற்கு, காற்றை அவர் 2,500 ரூபாய்க்கு விற்கிறார். அதாவது, அங்குச் சென்று சுத்தமான காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், அங்கு செல்பவர்களுக்கு உணவும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கச்சாய், ”எனது பண்ணையில் காற்று தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. இது நகரத்தின் மாசு மற்றும் புகை மூட்டத்திலிருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு விரும்பத்தக்க இடமாக இந்த இடம் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இலவசமாக தங்கலாம். அவர்களுக்கு, ’இயற்கையை அழிப்பதை உங்களால் நிறுத்த முடியாவிட்டால் இங்கு செல்ல வேண்டாம்’ என்று மட்டும் கண்டிஷன் போடப்படுகிறது. இயற்கை மீது கொண்ட அக்கறையாலும், காற்று மாசு குறித்து மனிதர்களுக்கு விழிப்புணவுர்வு ஏற்படுத்தவுமே இவ்வாறு செய்கிறேன்” என்கிறார்.

- ஜெ.பிரகாஷ்