உலகம்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு

webteam

தாய்லாந்து சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டனர். 

தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர் கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும் மழை காரணமாக 8-ம் தேதியில் இருந்துதான் அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் நேற்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

கடந்த முறை மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களை விட நேற்றைய மீட்புப் பணிக்கு அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து, இறுதியாக 4 சிறுவா்கள், கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணிகள் இன்று நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், தாம் லுவாங் குகைக்குள் ஜூன் 23 ஆம் தேதி சென்று சிக்கிக்கொண்ட 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் என அனைவரையும் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் குகைக்கு பாதுகாப்பு படை சீல் வைத்தது. மீட்கப்பட்ட சிறுவர்களில் சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருந்ததால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குகைக்குள் இருந்து வெளியே வந்த சிறுவர்கள் கண்டதும் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.