அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
லும்பாக் நகரில் இந்த பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவல்துறை குடியிருப்பு பகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டில் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெக்சாஸ் டெக் அதிகாரிகள் கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், மாணவர் ஒருவரிடம் இருந்து போதைப்பொருட்கள் சிக்கியது. பின்னர் போதைப்பொருள் வைத்திருந்த மாணவர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போது திடீரென அந்த மாணவர் துப்பாக்கி எடுத்து அதிகாரியை சுட்டுள்ளார். பின் அங்கிருந்து அந்த மாணவர் தப்பித்து சென்றுவிட்டார்” என்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் 19 வயதுடைய ஹோலிஸ் டேனியல்ஸ் என்ற மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.