கார் 60 கிமீ வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் போது ஓட்டுநர் அசந்து தூங்கிக்கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் தானியங்கி காரான டெஸ்லாவில் பயணம் செய்துகொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் இருவருமே அசந்து தூங்கிக்கொண்டு இருப்பது தான். அந்த வீடியோவில் டெஸ்லா கார் 50 முதல் 60கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஓட்டுநர் இருக்கையில் இருப்பவரும், அருகில் இருப்பவரும் அசந்து தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதனைக் கண்ட ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இது கார் நிறுவனமான டெஸ்லா வரை சென்றுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெஸ்லா நிறுவனம், ''டெஸ்லா கார் தானியங்கி வகை. தானாகவே இயக்கும் திறன் கொண்டது. ஆனாலும் ஓட்டுநர்கள் முழு கவனமுடன் இருக்க வேண்டும். தானியங்கி என்பதால் அசந்து தூங்கும் அளவுக்கு காரை பாதுகாப்பாக நினைக்கக்கூடாது'' என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ''ஓட்டுநரின் செயல்பாடு நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தால் கார் தொடர்ந்து எச்சரிக்கை மணி மூலம் அவர்களை விழிப்படைய செய்யும். முழு விழிப்புடன் இருந்தவாறே தானியங்கியை பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் இல்லை'' என குறிப்பிட்டுள்ளது.