நைஜீரியா
நைஜீரியா ட்விட்டர்
உலகம்

துப்பாக்கி முனையில் 287 பள்ளி மாணவர்கள் கடத்தல்.. பயங்கரவாதிகள் அட்டூழியம்.. பதற்றத்தில் நைஜீரியா!

Prakash J

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. இந்த நாட்டின் வடமேற்கு நகரமான கடுனா மாகாணத்தின் குரிகாவில் 280க்கும் மேற்பட்ட நைஜீரிய பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், குரிகாவை உள்ளடக்கிய கடுனா மாகாணத்தின் ஆளுநரான உபா சானியும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர், அப்பள்ளிக்குள் சென்று மாணவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. கடத்திச் சென்ற குழந்தைகளை உள்ளூர் மக்கள் மீட்கப் போராடியுள்ளனர். ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கு நைஜீரியாவில் விறகு சேகரித்த 12 பெண்களும் அவரது குழந்தைகளும் சமீபத்தில் கடத்தப்பட்டிருந்தனர். அதற்குப் பிறகு தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இவர்களை போகோ ஹராம் இஸ்லாமியக் குழு கடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், 287 குழந்தைகளைக் கடத்தியது எந்தக் குழு என யாரும் இதுவரை அறிவிக்கவில்லை.

இதுகுறித்து அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு, “கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் கடந்த வருடத்தில் இது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடத்தப்பட்டவர்கள் அவர்கள் கேட்கும் தொகையை ஒப்படைத்த பின்பு, விடுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது 287 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவின் மற்றொரு வடக்கு மகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடந்த 2014-ல் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு வடக்கு நைஜீரியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.