பாகிஸ்தான் ராய்ட்டர்ஸ்
உலகம்

பாகிஸ்தான் | ’182 பேர் பணயக்கைதிகள்..’ - பயணிகள் ரயிலைக் கடத்திய பலூச் கிளர்ச்சிப் படை!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் ஒன்று பலூச் கிளர்ச்சிப் படையால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு ஜாபர் எக்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் 9 பெட்டிகளில் 450 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த ரயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தியுள்ளனர். பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் ‘பலுச் விடுதலை இராணுவம்’ (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு, இந்த கடத்தலை அரங்கேற்றி உள்ளது. அவர்கள், தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, அதன்பிறகு ரயிலை நிறுத்த வைத்து உள்ளே ஏறியுள்ளனர்.

இந்த விபத்தின்போது ரயில் ஓட்டுநர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ரயிலில் இருந்த 20 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அவர்கள், பயணிகள் 182 பேரை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனர். இதில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை பலூச் கிளர்ச்சிப் படையினர் விடுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான்

இதுதொடர்பாக பி.எல்.ஏ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 182 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அனைத்து பணயக்கைதிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இதற்கான முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீதுதான் விழும" என எச்சரித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தகவல்படி, பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 150 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.