உலகம்

காபூல் பல்கலைக்கழக புத்தக கண்காட்சியில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 19 பேர் உயிரிழப்பு

sharpana

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை எல்லையாகக் கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக காபூல் விளங்குகிறது. இங்குள்ள காபூல் பல்கலைக்கழகத்தில், இன்று ஆஃப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் ஈரானிய புத்தக கண்காட்சியை திறந்து வைக்கச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நிகழ்ந்தபோது நூற்றுக்கணக்கானவர்கள் தப்பி சுவர்களில் ஓடி ஒளிந்துள்ளனர்.

ஆனாலும், அதில் 19 பேர் கொல்லப்பட்டது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் தற்கொலைப் படைத்தாக்குதலையும், மற்ற இருவர் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். 19 பேர் கொல்லப்பட்டு 22 பேர் படுகாயம் அடைந்துள்ள இந்த சோக சம்பவத்தில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்கானிஸ்தானின் பெரிய பல்கலைக்கழகமான காபூல் பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத குழுக்களும் பொறுப்பேற்கவில்லை. தாலிபான் குழுக்களும் தாங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இதே பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1747 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டுவரை முடியாட்சி நாடாகவே இருந்த ஆஃப்கானிஸ்தான் குடியாட்சி நாடாக மாறினாலும்  இன்னும் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை ஆகவே இல்லை.