கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. மேலும் நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் முக்கிய வருமானமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ள நிலையில், அதனை ஏற்றுமதி செய்ய மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதனால் ரஷ்யா கப்பல்கள் இந்த நாடுகளில் எங்குமே நங்கூரமிட முடியாத நிலையை மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தடைகளைத் தகர்த்து, ரகசியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா, பழைய மற்றும் முறைப்படி காப்பீடு செய்யப்படாத கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தக் கப்பல்கள் ரஷ்யாவின் ’நிழல் கப்பல் படை’ என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகளின் கொடிகளை கொண்டு ரஷ்யாவின் எண்ணெய்யை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், Enigma என்ற கப்பல் கேமரூன் நாட்டுக் கொடியுடனும், Universal என்ற கப்பல் ரஷ்ய நாட்டுக் கொடியுடனும் ரஷ்ய எண்ணெய்யை பிரிட்டன் - பிரான்ஸ் இடையே இருக்கும் ஆங்கில கால்வாய் வழியே கொண்டு சென்றன. தூரத்தில் இந்த கப்பல்களை பிரிட்டிஷ் கடற்படையின் RFA Tideforce என்ற கப்பல் கண்டறிந்துள்ளது. இதனால் அந்தக் கப்பலைச் சோதனை செய்ய பிரிட்டிஷ் கடற்படை முடிவு செய்தபோதுதான் அந்தக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் (Admiral Grigorovich) என்ற அதிநவீன போர்க்கப்பல் வருவது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பிரிட்டனின் RFA Tideforce கப்பல் உடனடியாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க் கப்பலை எதிர்கொள்ளும் வலிமை இல்லாதததாலேயே பிரிட்டிஷ் கடற்படையின் RFA Tideforce அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
பிரிட்டனுக்கு மிக அருகில் இருக்கும் ஆங்கில கால்வாயிலேயே பிரிட்டிஷ் கடற்படைக்கு சவால்விட்டு தனது எண்ணெய்க் கப்பல்களை ரஷ்யா பாதுகாப்பாக அழைத்துச்சென்றது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.