பொது இடங்களில் தாய்மொழியான தெலுங்கில் யாரும் பேசிக்கொள்ள வேண்டாம் என அமெரிக்க வாழ் தெலுங்கு இன மக்களுக்கு “தெலுங்கானா அமெரிக்க தெலுங்கு சங்கம்” வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா என்ற பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு விடுதி ஒன்றில் ஆடம் புரின்டன் என்பவருக்கும் ஸ்ரீநிவாஸுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தினால், புரின்டன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஸ்ரீநிவாஸ் உயிரிழந்தார். மற்றொரு இந்தியர் உள்பட 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். இந்தியர்கள் மீது இனவெறி கொண்டு, இந்த கொடுஞ்செயலை அரங்கேற்றிய அமெரிக்காவை சேர்ந்த புரின்டன் (51) கைது செய்யப்பட்டு விட்டார்.
இந்நிலையில், நமது தாய் மொழியை எவ்வளவு தான் நேசித்தாலும், அமெரிக்காவில் வசிக்கும் தெலங்கு இன மக்கள் தாய்மொழியில் பொதுஇடங்களில் உரையாட வேண்டாம் என ‘தெலுங்கானா அமெரிக்க தெலுங்கு சங்கம்” வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், கூடுமானவரை ஆங்கிலத்தில் உரையாடும் படியும் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், ஏதேனும் வாக்குவாதம் வரும் சூழல் ஏற்பட்டால் அதனை தவிர்த்து உடனடியாக அந்தஇடத்தை விட்டு வெளியேறுமாறும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.