tarique rahman எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | முடிவுக்கு வந்த பெண்கள் போர்.. புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு!

வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி கட்சியைச் சேர்ந்த தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Prakash J

வங்கதேசத்தில் கடந்த 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிஎன்பி கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தாரிக் ரஹ்மான் நீண்டகால தசாப்தத்திற்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பெண்கள் பிரதமர் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

அண்டை மாநிலமான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, கடந்த 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கட்சி தடை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியும் (BNP), அதன் போட்டியாளரும் ஒருகாலத்தில் அக்கட்சியின் கூட்டாளியுமாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் களத்தில் சந்தித்தன. தாரிக் ரஹ்மான் 10 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மறுபுறம், 11 கட்சிகளைக் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷ் (JIB) கூட்டணிக்கு ஷஃபிகுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 51 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

ஷேக் ஹசினா, கலிதா ஜியா

இத்தேர்தலில், வங்காளதேச தேசியவாதக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியைப் பெற்றது. தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, 297 இடங்களில் பிஎன்பி தலைமையிலான கூட்டணி 212 இடங்களையும், ஜமாத் தலைமையிலான கூட்டணி 77 இடங்களையும் வென்றது. பிஎன்பி கட்சி 151 இடங்களைப் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷாஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஷேக் ஹசீனா மற்றும் தாரிக்கின் தாயார் கலீதா ஜியா ஆகியோரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பல தசாப்த கால அரசியலுக்குப் பிறகு (பெண்கள் போருக்குப் பிறகு), முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். இதன்மூலம், அவரது பதவியேற்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிக்கிறது. ரஹ்மானைத் தவிர, 25 அமைச்சர்களும் 24 மாநில அமைச்சர்களும் பதவியேற்றனர். 25 அமைச்சர்களில் 17 பேர் புதிய முகங்கள், அனைத்து மாநில அமைச்சர்களும் முதல்முறையாக இந்தப் பதவியை வகிக்கின்றனர். பிரதமர் ரஹ்மான் முதல்முறையாக அமைச்சரவை உறுப்பினராகவும் உள்ளார்.

tarique rahman

ஐந்து ஆண்டு பதவிக்காலம் நீடிக்கும் பிரதமர் தாரிக் ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகனாவார் . 35 ஆண்டுகளில் வங்கதேசத்தின் முதல் ஆண் பிரதமரும் ஆவார். முன்னதாக, பி.என்.பி நாடாளுமன்றக் கட்சி நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடி, ரஹ்மானை அதன் நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அதற்கு முன்பாக, 2024இல் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக இருந்த முகமது யூனுஸ் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்தார்.