உலகம்

அடிப்படை வசதிகளுக்கே உக்ரைனில் அல்லல்படும் தமிழக மாணவர்கள்... தவிக்கும் பெற்றோர்கள்!

கலிலுல்லா

உக்ரைனில் சிக்கிதவிக்கும் தமிழக மாணவர்களை எண்ணி அவரது பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சில பெற்றோர்களின் கவலைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

சேலம் :

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் லட்சுமண சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. ஆத்தூரில் உள்ள கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங் சொசைட்டியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ரித்திகா உக்ரைன் நாட்டில் டேனிலியஸ் பகுதியில் உள்ள கார்க்கியூ நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் நான்காம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வருகிறார். தற்போது ரஷ்யாவிற்கும் உக்ரைன் நாட்டிற்க்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் தன் மகளை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்துவர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மதுரை:

மதுரை தெற்கு வாசல் சஹஜெந்திரன் ராஜலட்சுமி தம்பதியின் மூத்தமாக பங்கஜ்நாபன் உக்ரைனில் ஏர்ரோ ஸ்பேஸ் பொறியில் இறுதி ஆண்டு பயின்றி வருகிறார். உக்ரைன்- ரஸ்யா போர் துவங்கியதையடுத்து அங்கு சிக்கித் தவிக்கு தனது மகனை மீட்க கோரி அவரின் பெற்றோர் இன்று மதுரை மாவட்ட் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மகனை உடனடியாக மீட்க கோரி மனு அளித்தனர்.

அதே போல் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த லீலா உக்ரைனில் மாஸ்டர்ஸ் பயிலும் தனது மகன் சஜுகுமாரை மீட்க கோரி மனு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இன்று காலை 5 மணி வரை தனது மகன் பங்கஜநாபனுடன் தொடர்பு கொண்டதாகவும் அவருடன் அப்பகுதியில் 150 மாணவர்கள் இருப்பதாகவும், நேற்று இரவு வரை கல்லூரியிலுள்ள விடுதியில் இருந்துள்ளார். தற்போது குண்டுகள் போடும் அபாயம் இருப்பதால் வேறு இடத்திற்கு போவதாக கூறியுள்ளார்'' என்றார்.

தேனி:

உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் பல இந்திய மாணவர்கள் உக்ரைனில் மாட்டி கொண்டு உள்ளதாகவும், மாணவிகள் உடல் உபாதைகளை கழிக்க கூட முடியாத நிலையில் உள்ளதாக உக்ரைனில் இருந்து கஷ்டபட்டு தேனி திரும்பி மருத்துவ கல்லூரி மானவர் தனுஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இவர் அங்குள்ள கார்விக் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். போர் ஏற்படும் சூழல் கடந்த 1 வாரமாக நிலவி வந்த சூழலில் கடைசி நேரத்தில் இந்தியாவிற்கு டிக்கெட் புக் செய்து விட்டு பின்னர் அங்கிருந்து 20 மணி நேரம் ரயில் மூலம் லிவ்யா என்ற பகுதிக்கு வந்து அதன் பின்னர் துருக்கி சென்று அங்கிருந்து கத்தார் சென்று, பின்னர் அங்குள்ள விமானம் மூலமாக கேரளா வந்து தமிழகம் திரும்பி வந்துள்ளார்.

அவர் கிளம்பும் வரையிலும் போர் ஏற்படவில்லை என்றும், கிளம்பிய பிறகு தாங்கள் வந்த வழியில் குண்டுகள் வீசப்பட்டதாகவும், பல பெண் மருத்துவ மாணவிகள் அடிப்படை வசதி கூட இல்லாமல் மெட்ரோ என்ற பகுதியில் தங்கி உள்ளதாகவும், அவர்களுக்கு உணவும் கழிப்பிட வசதி கூட இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவ்வாறு முன்னொச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பல மானவர்கள் இந்தியா திரும்பி இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி சேர்ந்தவர் மகுடீஸ்வரன் இவரது மகன் நிரஞ்சன் இவர் உக்ரைனில் உள்ள நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் நிரஞ்சன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 19 மாணவ மாணவியர்கள் இந்தியா திரும்ப வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நிரஞ்சனின் தந்தை மகுடீஸ்வரன் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் மகனை மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்தார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாக தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார். மேலும் இது தொடர்பாக நிரஞ்சன் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் அங்கு உள்ள மோசமான நிலமை குறித்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்த பொறியியல் மாணவன் பிரவீன் இந்தியாவின் அதிக நீளமான நாக்கு உடையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 10.8 செமீ நீளம் நாக்கை கொண்ட மாணவன் பிரவீன் தற்பொழுது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்தி அமைதியான சூழலை உருவாக்க வலியுறுத்தும் விதமாகவும், போரால் உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு வர வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை தனது நாக்கால் ஓவியமாக வரைந்து வலியுறுத்தியுள்ளார். மாணவன் பிரவீன் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 208 அடி கொண்ட தேசிய கொடியை நாக்கால் வரைந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.