உலகம்

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு

webteam

இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்கே உடனான மோதலின் உச்சகட்டமாக அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. இ‌தனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக அந்நாட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். 

ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பிரதமரா? என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் திருப்பம், இலங்கையை தாண்டி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை அரசியலமைப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் நீடிப்பதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்ததால் அங்கு அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், ராஜபக்ச பிரதமராக முறைபடி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற அவர், தனது அலுவலகப் பணிகளை தொடங்கியுள்ளார். 

ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றது குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்க ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்ட விரோதமானது என்றும் அரசமைப்புக்கு விரோதமானது எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் நாடாளுமன்றத்தை வரும் 16 ஆம் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சூழலில் ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போதைய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், புதனன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள்  மஹிந்த ராஜபக்ச எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு அதரவு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

அதிபர் ஜனநாயகத்தை மீறி செயல்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருக்கும் பிரதமரை அவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். எனவே நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என  ரணில் ஆதரவளார்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ரணில் தான் பிரதமராக இருப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.