உலகம்

கள நிலவரம் லைவ்: ``கையிலிருந்த உணவுடன் கிளம்பிவிட்டோம்”- ருமேனியா நோக்கி தமிழக மாணவர்கள்

நிவேதா ஜெகராஜா

உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து தமிழக மாணவர்கள் ரயில் மூலம் ருமேனியா எல்லைக்கு சென்று வருகின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா போர் உக்கிரமடைந்துள்ளதால் நாட்டைவிட்டு இந்திய மாணவர்கள் வேகமாக வெளியேறிவருகின்றனர். இந்திய தூதரகமும், அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்ததால், அவர்கள் வேறு வழியின்றி வெளியேறுகின்றனர்.

அங்குள்ள நிலவரம் குறித்து ரயில் வழியாக பயணித்த திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவ மாணவி கிருத்திகா நம்மிடம் பேச்கையில், "3 மணி நேரம் காத்திருந்து ரயிலில் ஏறி ருமேனியா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கார்கிவில் இருந்து ருமேனியா செல்ல, கிட்டதட்ட ஒரு நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். விடுதியில் இருந்த அனைவரும் ருமேனியா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 3 நாட்களுக்கு முன்பு வாங்கிய தண்ணீர், உணவு எங்களிடம் உள்ளது.

அரசு அதிகாரிகள் யாரையும் இங்குள்ள சூழலில் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதேநேரம் அதிகாரிகளாலும் எங்களுக்கு உதவ முடியாத சூழல் உள்ளது. ஆகவே எங்களிடம் ஏற்கெனவே இருக்கும் உணவு, தண்ணீரை வைத்துக் கொண்டு வெளியேறினால் போதும் என ருமேனியா நோக்கி செல்கிறோம்" என்று பதற்றமும் நம்பிக்கையும் நிறைந்த குரலில் பேசினார். கிருத்திகாவை போல, இந்திய மாணவர்கள் 6,000 பேர் வரை கார்கிவில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.