israel hamas
israel hamas pt web
உலகம்

“கைக்குழந்தைகளோடு பதுங்குக் குழியில் 3 நாட்கள்” - இஸ்ரேல் அனுபவங்களைப் பகிரும் சென்னை குடும்பத்தார்!

PT WEB

பதுங்கு குழியில் இருந்த குடும்பம்

மத்திய இஸ்ரேல் பகுதியில் ஹமாசின் இஸ்ரேல் ராக்கெட் சத்தத்தோடும் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியோடும் பதுங்கு குழியில் 3 நாட்கள் இருந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த குணசேகரன். பத்திரமாக தாயகம் வந்திறங்கிய குணசேகரன் குடும்பத்தினர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் அதில் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் ரேகோவாட். அங்குதான் சென்னையைச் சேர்ந்த குணசேகரன் தரன், அவரது மனைவி சாந்திதேவி மற்றும் குடும்பத்தினர் வசிக்கிறார்கள். போர் தொடங்கிய நேரத்தில் தங்களின் அனுபவத்தை விவரிக்கிறார் சாந்திதேவி.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் மோசமான நாள்

அவர் கூறுகையில், “ஒவ்வொரு சைரனுக்கு நடுவில் 10 நிமிடங்கள் இடைவெளி விடுவார்கள். பிரட் தான் உணவாக கிடைக்கும்” என்றார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு கவச அமைப்பின் மூலம் எதிர் ராக்கெட்டுகள் வீசப்பட்ட போது கடும் அதிர்வை உணர்ந்ததாகக் கூறுகிறார். குணசேகரன். அவர் கூறுகையில், “ராக்கெட் தாக்குதல் தொடங்கிய நாள் எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டொமொத்த நாட்டிற்கும் மோசமான நாள். 4 வருடமாக அங்கிருக்கிறேன். இதுபோன்ற தாக்குதலை ஒன்றிரண்டு தடவை இதற்கு முன்பே பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை மிக அதிகமாக இருந்தது. எங்களுக்கு பயத்தையும் கொடுத்தது. குழந்தைகளை வைத்துக் கொண்டு அங்கிருக்க முடியவில்லை” என்றார்.

உணவு, குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றும் போர் தொடங்கி இரண்டு நாட்களில் தமிழக அயலகத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டதாகவும் அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுத் துறையின் மூலம் இந்தியா வந்துள்ளதாக கூறுகிறார்கள் போர்ச் சூழலில் இருந்து தாயகம் திரும்பிய குணசேகரன் குடும்பத்தினர்.