ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021இல் அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதிராகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வயது வந்த பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடைவிதிக்கப்பட்டது. சிறுமிகளாக இருந்தாலும்கூட சிறுவர்களுடன் இணைந்து கல்வி பயில தடை எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தவிர, ஆடை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு ஆண் துணையின்றிச் செல்லக்கூடாது என்பதுடன் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதற்கு, தலிபான் அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆப்கானிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய், ”பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருப்பதை, எந்தக் காரணத்தைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது. இது, 2 கோடி பேருக்கு இழைக்கப்படும் அநீதி. ஷரியத் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது, அரசாங்கம் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுத்த நடவடிக்கை. பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, தாலிபன் அரசு விதித்துள்ள பெண் கல்விக்கு எதிராக கிரிக்கெட் வீரர் ரஷித் கானும் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். அவர், “ஆஃப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்புமட்டுமல்ல... நமது நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றிய தார்மீகக் கடமை” எனத் தெரிவித்திருந்தார்.