தாலிபன், வைஃபை ராய்ட்டர்ஸ், மெட்டா ஏஐ
உலகம்

ஆப்கானிஸ்தான் | 6 மாகாணங்களில் இணையச் சேவைக்கு தடை.. தாலிபன் அரசு அதிரடி!

ஆப்கானிஸ்தானில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணையச் சேவைக்கு, தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.

Prakash J

ஆப்கானிஸ்தானில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணையச் சேவைக்கு, தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.

2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும், ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்பது முதல் கார் ஓட்டுநர்கள் இசையை இசைக்க தடை விதிப்பது வரை எனப் பெண்களுக்கு எதிராகவும் பொதுவான கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. தாலிபனின் இந்தக் கட்டுப்பாடுகள் உரிமைக் குழுக்கள் மற்றும் பல வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றன.

ஆப்கானிஸ்தான்

இதனால், உலக நாடுகள் தாலிபன் அரசை அங்கீகரிக்கத் தயங்கினாலும், ரஷ்யா அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், தாலிபனின் தற்போதைய ஆட்சியை அங்கீகரிக்கும் முதல் நாடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையை ரஷ்யா பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணையச் சேவைக்கு, தாலிபன் அரசு தடை விதித்துள்ளது. தாலிபன்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த் சாதா பிறப்பித்த உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, இதுபோன்று தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இருப்பினும், மொபைல் இணையம் செயல்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில், தேவைகளுக்கு மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்தத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், நேற்று முதல் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணையச் சேவையை இழந்துள்ளதுடன் பெரிய பாதிப்பிற்கும் ஆளாகி இருக்கின்றனர்.

wifi

இதுகுறித்து, ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஸல்மே கலீல்சாத் இந்தத் தடை அபத்தமானது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பல இஸ்லாமிய நாடுகளைப் போலவே, ஆபாசப் படங்கள் உண்மையில் கவலைக்குரியதாக இருந்தால், அதை தடை செய்யலாம். இஸ்லாமிய உலகில் பல நாடுகள் அதைச் சரியாகச் செய்கின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.