உலகம்

'பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும்'- ஆப்கனில் புது உத்தரவு அமல்

ஜா. ஜாக்சன் சிங்

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு அங்கு முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து, அதிபர் அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசை கவிழ்த்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக அங்கு பழமையான ஷரியத் சட்டங்களை தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெண்கள் செல்லக் கூடாது; பெண்கள் வெளியே வரும்போது கட்டாயம் பர்தா அணிய வேண்டும்; ஆண்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர்களும், தொகுப்பாளர்களும் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும் என்ற உத்தரவை தலிபான்கள் கடந்த வாரம் பிறப்பித்தனர். இருந்தபோதிலும், இந்த உத்தரவை பெரும்பாலான பெண் செய்தி வாசிப்பாளர்கள் பின்பற்றாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு இணங்காத பெண்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஆப்கன் ஒழுக்க நெறிகள் துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பெண் செய்தி வாசிப்பாளர்களும், தொகுப்பாளர்களும் இன்று முகக்கவசம் அணிந்தபடியே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

இதுகுறித்து அங்குள்ள டோலோ நியூஸ் டிவியின் பெண் செய்தி வாசிப்பாளரான சோனியா நியாஸி கூறுகையில், "முஸ்லிம் பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது ஆப்கானிஸ்தானின் பழக்கவழக்கம் கிடையாது. அது வெளிநாட்டு கலாசாரம். அந்தக் கலாசாரத்தைதான் தலிபான்கள் இப்போது எங்கள் மீது திணிக்கின்றனர். முகக்கவசம் அணிந்து செய்தி வாசிப்பதும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் மிகவும் சிரமமாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பெண்களை வீடுகளுக்குள் முடக்கவே இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. பெரிய இஸ்லாமிய அறிஞர்கள் கூட இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்றார்.