செய்தியாளர் பாலவெற்றிவேல்
சிரியா புதிய கற்கால கலாச்சாரத்தின் மையங்களில் ஒன்றாகும். உலகில் முதன்முதலில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடந்த இடமாக சிரியா கருதப்படுகிறது. மனித நாகரீகத்திலும் மத நூல்களிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த பகுதி முதலாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சின் கைவசம் சென்றது. 1944 ஆம் ஆண்டு பிரான்சில் இருந்து விடுதலை பெற்றாலும், சிரியாவை கைப்பற்ற பல நாடுகள் துடித்தன. பல்வேறு விதமான பழங்குடியினரும் சிறுபான்மையினரும் இருந்ததால் கடந்த 80 ஆண்டுகளாகவே சிரியாவில் அமைதி என்கிற பேச்சுக்கே இடமில்லை.
1963 இல், இராணுவ சதிப்புரட்சி மூலம் ஹபீஸ் அல்-அசாத் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். அப்போதிருந்து, சிரியா அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆளப்படுகிறது. இது அரசியலமைப்பையும் அதன் குடிமக்களுக்கான பெரும்பாலான சிவில் உரிமைகளையும் இடைநிறுத்தியது. ஹபீஸ் அல்-அசாத் 1970 முதல் 2000 இல் இறக்கும் வரை அதிகாரத்தில் இருந்தார். அவருக்குப் பின் அவரது மகன் பஷர் அல்-அசாத் போட்டியின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிரியாவின் மக்கள் தொகையில் 74% சன்னி இஸ்லாமை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அசாத்தின் குடும்பம் சியாவின் உட்பிரிவான அலவீத்தர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் 10% அளவிற்கு சிரியாவில் வாழும் நிலையில் அசாத்தின் ஆட்சி காலத்தில் பெரும்பான்மை சன்னி இஸ்லாமிய மக்கள் தங்களுடைய உரிமையை இழப்பதாக கருதினர். இதன் காரணமாகவே மக்கள் அமைதியான முறையில் போராட முயல அதிபர் அசாத் அதை வன்முறையால் அடக்கினார். இதனால் 2011 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு போர் தொடங்கியது.
துருக்கி ஆதரவு, ஈரான் ஆதரவு, ஈராக் ஆதரவு, இஸ்ரேல் ஆதரவு, ரஷ்ய ஆதரவு, அமெரிக்க ஆதரவு என பல்வேறு ஆதரவு போராளி குழுக்கள் ஆங்காங்கே உருவாகி தனித்தனி பகுதிகளை தங்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து ஆயுத ஆட்சி நடத்தி வந்தன. 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிகப்பெரிய அளவில் காலூன்றி ஆளும் அசாத் அரசுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கியது. 2019 ஆம் ஆண்டு அதன் தலைவர் கொல்லப்பட்ட பிறகு ஐ. எஸ்.ஐ. எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டாலும், பதினைந்துக்கும் மேற்பட்ட போராளி அமைப்புகள் சிரியாவை ஆட்சி செய்தன. மிகப்பெரிய அளவிலான அசாத்தின் சிரிய ராணுவம், சிரிய நிலப்பரப்பின் 60 சதவீத பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அதன் தாக்கம் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான லெபனான், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலித்தது.
இந்நிலையில் அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அபு முகமது அல்-ஜூலானி அந்த அமைப்பில் இருந்து 2017 ஆம் ஆண்டு பிரிந்து ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hay'at Tahrir al-Sham - HTS) என்ற அமைப்பின் தளபதியானார். இவர் சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது மிகவும் பிரபலமான இஸ்லாமிய புரட்சி இயக்கத்தின் தலைவராக வெளிப்பட்டார். HTS தற்போது சிரியாவில் அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கமாக செயல்பட்டு வருகிறது, குறிப்பாக இட்லிப் பகுதியில் பலமாக உள்ளது.
இந்நிலையில்தான் அல்குய்தா அமைப்பில் பணியாற்றிய போது ஏற்பட்ட போர் திறன், ஆயுதங்கள் கையாளுதல், சரியான வியூகம் போன்ற காரணங்களினால் கடந்த மூன்று மாதங்களாகவே சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹமாவை கைப்பற்ற திட்டமிட்டு அது நிறைவேறிய ஓரிரு நாட்களுக்குள்ளாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை அவர் தலைமையிலான போராளி குழுக்கள் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டை விட்டு தப்பி ஓடிய பஷர் அல் அசாத் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவாளர் என்பதால் அந்த நாட்டின் ஏதாவது ஒரு ராணுவ தளத்திலோ அது தொடர்புடைய இடங்களிலோ தஞ்சம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வளவு நாட்களாக பெரும்பான்மை மக்களின் விருப்ப தலைவராக அசாத் இல்லாததன் காரணமாக அவர் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிரியாவில் யார் தலைவராக ஆட்சி அமைக்கப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்வியாகவே எழுந்துள்ளது.
என்னதான் HTS தலைநகரை கைப்பற்றி இருந்தாலும் நாட்டின் பல பகுதிகள் ஆறுக்கும் மேற்பட்ட போராளிகளின் அமைப்பில் துண்டு துண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மனித நாகரீகம் தோன்றுவதற்கு அடிப்படையான விவசாயத்தை கண்டறிந்த நாடு இன்று வறுமையால் தவித்து வருவது காலம் செய்த கோலமாக இருக்கிறது.