மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர். மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த நிலையில், சிரியாவில் முன்னாள் அதிபா் அல் அசாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையிலான மோதலில் 17 போ் உயிரிழந்தனா். அல் அசாத் ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலை கொடுமைகளுக்குக் காரணமானவா் என்று குற்றஞ்சாட்டப்படும் முகமது காஞ்சோ ஹஸன் என்ற முன்னாள் அதிகாரியைக் கைது செய்வதற்காக தற்போதைய அரசின் உள்துறை அமைச்சகத்தைச் சோ்ந்த படையினா் டாா்டஸ் நகருக்குச் சென்றனா்.
அல் அசாத்தின் அலாவி சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய அந்த நகரில், இந்நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு எழுந்தது. கைது செய்ய வந்திருந்த கிளா்ச்சிப் படையினருக்கு எதிராக, அங்கிருந்த ஆயுதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையைச் சோ்ந்த 14 பேரும், அல் அசாத் ஆதரவுப் படையைச் சோ்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா். இந்த மோதலில் 17 போ் உயிரிழந்தது.
இது புதிய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் இதேபோல் அசாத் ஆதரவு பிரிவினருக்கும் ஆளும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.