பஷார் அல் அசாத், அஸ்மா அல் அசாத் எக்ஸ் தளம்
உலகம்

ரஷ்யாவில் தஞ்சமடைந்த சிரிய முன்னாள் அதிபர் அசாத்.. விவாகரத்து கோரி மனைவி விண்ணப்பம்!

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவியான அஸ்மா அல்-அசாத், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

பஷார் அசாத்தின் மனைவி விவாகரத்து செய்ய முடிவு?

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது.

அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர். மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ரஷ்யா அரசாங்கம் அடைக்கலம் தந்துள்ளது.

பஷார் அல் அசாத், அஸ்மா அல் அசாத்

இந்த நிலையில், பஷார் அல் அசாத்தின் மனைவியான அஸ்மா அல்-அசாத், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் தனது கணவன் அசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது பிறந்த மண்ணுக்கு [லண்டனுக்கு] திரும்ப விரும்புவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அஸ்மா, ரஷ்யாவைவிட்டு வெளியேற சிறப்பு அனுமதிகோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யார் இந்த அஸ்மா அல்-அசாத்?

1975ஆம் ஆண்டு சிரியா பெற்றோருக்கு லண்டனில் பிறந்தவர் அஸ்மா. இதையடுத்து அவர் பிரிட்டிஷ் மற்றும் சிரியா இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்து முதலீட்டு வங்கியில் பணிபுரிந்த அஸ்மா, கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பரில் அசாத்தை மணந்தார். அந்த வருடமே, அசாத் சிரியாவின் அதிபர் ஆனார். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சிரிய கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து அஸ்மா தனது குழந்தைகளுடன் லண்டனில் குடியேற முயன்றதாகக் கூறப்படுகிறது.

syria former president wife

இப்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் அல்-அசாத், ரஷ்ய அதிகாரிகளால் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார். அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும், அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் 270 கிலோகிராம் தங்கம், டாலர் 2 பில்லியன் ரொக்கம் மற்றும் மாஸ்கோவில் வீடு உள்ளிட்ட அவரது சொத்துகளை முடக்கியுள்ளனர்.