சிரிய தலைநகர் டமாஸ்கஸை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் கூட்டணி கைப்பற்றிய நிலையில், அதிபர் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கு ஆசிய நாடான சிரியாவில் உள்நாட்டுப்போர் தொடங்கியது. அப்போதில் இருந்து உள்நாட்டுப்போரில் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிரிய மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளையும் இருப்பிடங்களையும் விட்டு வெளியேறி அகதிகளாக மாறியுள்ளனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பெரிய வன்முறைகள் ஏதும் நடைபெறாத நிலையில், சமீபத்தில் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. சிரிய அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய புரட்சியாக இது பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த ஒரு வாரத்திற்குள் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் தலைமையிலான குழு நாட்டில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது. குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய நகரமாக அலெப்போவைக் கைப்பற்றியது. பின் ஹமா, ஹோம்ஸ் போன்ற நகரங்களையும் கைப்பற்றியது. வடமேற்குப் பகுதிகளில் பெரும்பான்மையான நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
கடந்த சில தினங்கள் முன் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் கூட்டணியின் தலைவர் அபு முகமது அல்-ஜோலானி பேட்டியளித்திருந்தார். அதில், “அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதே எங்களுடைய இலக்கு. எங்களுடைய குறிக்கோள் மற்றும் புரட்சியின் இலக்கு அதுவே. அந்த இலக்கை அடைய கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது நமது உரிமை. சிரியாவில் 40 ஆண்டுகளாக நீடித்த காயத்தை சுத்தம் செய்யவே எங்கள் போராளிகள் ஹமாவிற்குள் நுழைந்தனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், கிளர்ச்சியாளர்கள் குழு தலைநகரான டமாஸ்கஸ்-க்குள் நுழைந்து தலைநகரையும் கைப்பற்றியுள்ளது. முன்னதாக, கிளர்ச்சியாளர்கள் தலைநகரை சுற்றி வளைத்த நிலையில் அசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறிவிட்டார் என மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர் எங்கு சென்றார் என்ற செய்தி இன்னும் வெளியாகவில்லை. அசாத்தின் விமானம் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டதாகவும், அக்கர் எனும் பகுதிக்கு வடக்கே லெபனானில் வான்வெளிப்பகுதிக்கு வெளியே விபத்துக்குள்ளானதாவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணைய தளங்களில் பரவி வருகிறது.
கிளர்ச்சியாளர்கள் குழுவோ, தாங்கள் தலைநகருக்குள் நுழையும்போது ராணுவம் அங்கிருந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்,.
டமாஸ்கஸைக் கைப்பற்றியபின், ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், இந்நிகழ்வை வரலாற்று சிறப்பு மிக்கத் தருணம் எனத் தெரிவித்துள்ளது. “சிறையில் அடைபட்டுள்ளவர்களை விடுவித்து, செட்னாயா சிறையில் இருந்த அநீதியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததை சிரிய மக்களுடன் அறிவித்து அவர்களுடன் கொண்டாடுவோம்” என்றும் சிரிய கிளர்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. செட்னாயா என்பது டமாஸ்கஸின் புறநகரில் அமைந்துள்ள ஒரு ராணுவச் சிறைச்சாலை. இங்கு சிரிய அரசு ஆயிரக்கணக்காணவர்களை சிறையில் அடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸை கைப்பற்றியப் பின் அங்கிருந்த முக்கிய சதுக்கமான உமாயத் சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள் ‘சுதந்திரம்’ என கோஷமிட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சிரிய பிரதமர் முகமது அல் ஜலாலி இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பேசியிருந்தார். அதில், “சிரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைமைக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன். மக்கள் யாரும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் மக்களை அகதிகளாக மாற்றிய, இந்த 13 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது சிரியாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முடிவு மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 54 ஆண்டுகளாக சிரியாவில் அசாத்தின் குடும்பம் ஆட்சிபுரிந்துள்ளது. அசாத்திற்கு முன்பாக அவரது தந்தை ஹபீஸ் 29 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி புரிந்தார். 2000ல் ஏற்பட்ட அவரது மறைவுக்குப் பின் அசாத் ஆட்சிக்கு வந்தார். சீரான ஆட்சியை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அது சில காலம் மட்டுமே நீடித்தது.
2011 ஆம் ஆண்டு அவரது ஆட்சிக்கு எதிராக அமைதியாக நடத்தப்பட்ட போராட்டங்களையே கொடூரமாக ஒடுக்கிய மனிதராக மாறினார், இது உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. ஈரான் மற்றும் ரஷ்யாவின் உதவியின் காரணமாக உள்நாட்டுப் போரில் சிரிய ராணுவம் பாதிப்புகளைச் சந்தித்தாலும், அதிபரது கை ஓங்கியே இருந்தது. ஆனால், சிரியா அதிபருக்கு உதவி புரிந்த நாடுகள் தங்களது உள்நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்தும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் குழு இதைக் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது.