உலகம்

“சிலர் கடினமாக உழைக்கவில்லை” - கூகுள் ஊழியர்கள் மீது சிஇஓ சுந்தர் பிச்சை அதிருப்தி!

ச. முத்துகிருஷ்ணன்

சிலர் கடினமாக உழைக்கவில்லை என நினைக்கும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தமது ஊழியர்கள் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் எவ்வளவு கடினமாய் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சில முதலாளிகள் திருப்தி அடைவதில்லை. அதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் தமது ஊழியர்களிடம் பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை, “உற்பத்தி திறனில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருந்து போதுமான உற்பத்தி (Output) கிடைக்கவில்லை” என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“எல்லா நிறுவனங்களையும் போல் நாமும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை. இதுபோன்ற சவால்களை தடையாக பார்க்கக் கூடாது. மாறாக, உங்கள் கவனத்தை ஆழப்படுத்தவும் நீண்ட கால வளர்ச்சிக்கு முதலீடு செய்யவும் வாய்ப்புகளாகக் காணுங்கள். இந்த சிக்கல் தீரும்வரை இந்தாண்டு முழுவதும் புதிய பணியமர்த்துதலை மெதுவாக்க முடிவு செய்துள்ளோம். இருப்பினும் பணியமர்த்தலை முற்றிலுமாக முடக்கவில்லை. தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் இதர முக்கியப் பணிகளுக்கு நிறுவனம் தொடர்ந்து புதிய பணியமர்த்துதல்கள் நடைபெறும். அவ்வாறு பணியமர்த்தப்படும் சிறந்த திறமைசாலிகள் நிறுவனத்துடன் நீண்ட காலம் இணைந்திருப்பதை உறுதிசெய்வோம்” என்றும் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக மெட்டா குழுமத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தமது ஊழியர்களிடம், “உண்மையில் மெட்டா நிறுவனத்தில் இருக்கக்கூடாத சிலர் இருக்கலாம். நம் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், அதிக ஆக்ரோஷமான இலக்குகளை வைத்திருப்பதன் மூலம், அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதன் மூலம் இந்த இடம் உங்களுக்கானது அல்ல என்பதை நீங்கள் உணரக்கூடும். அந்த சுய தேர்வு அவசியம் என்று நினைக்கிறேன்” என்று சமீபத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.