ஆஸ்திரேலியாவில் சுமத்ரான் என்ற அரிய வகை புலி 3 குட்டிகளை ஈன்றுள்ளது.
உலகில் மொத்தமே தற்போது 350 சுமத்ரான் புலிகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் இவை அரிய வகை புலி இனமாக கருதப்படுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் டெரோங்கா வனவிலங்கு பூங்காவில் வளர்க்கப்பட்டுவரும் கார்த்திகா என்ற சுமத்ரான் புலி, 2 பெண் புலி குட்டிகளையும், ஒரு ஆண் புலி குட்டியையும் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஈன்றது.
புதிதாக பிறந்துள்ள புலிக்குட்டிகளால் விலங்கியல் பூங்கா நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது அதிக கவனத்துடன் பாதுகாத்துவரும் புலிக்குட்டிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இன்னும் பெயரிடப்படாத இந்தக் குட்டிகள் தத்தி தத்தி நடக்கும் காட்சிகள் பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், விலங்கியல் பூங்காவில் இந்தப் புலி குட்டிகள் அதீத கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.